பூச்சொரி விழா என்பது அம்மன் கோயில்களில் செய்யப்படும் முக்கிய விழாவாகும். இதில், பக்தர்கள் அம்மனுக்குக் கூடை கூடையாக மலர்களைக் கொண்டு வந்து வழிபடுவார்கள். மேலும் இது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு விழாவாகும்.
உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் சிவபெருமானை வேண்டி மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை, 28 நாட்கள் அம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான தளிகைக்குப் பதிலாக துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு, பாசி பருப்பு, இளநீர் வகைகளே படையலாக வைத்து படைக்கப்படுகின்றன . பக்தர்களும் விரத உணவை மட்டுமே உண்கிறார்கள்.
அம்மன் விரதம் இருக்கும் நாட்களில் அம்மன் மனதை குளிர்ச்சி செய்யவே பூச்சொரிதல் விழா நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. பக்தர்கள் தங்கள் பக்தி மற்றும் விசுவாசத்தை அம்மனுக்கு வெளிப்படுத்தும் ஒரு வழியாக இந்த விழா கருதப்படுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது.